மதுரை : ஒரே நேரத்தில் ஏழு விமானங்களை நிறுத்தவும், 500 பயணிகளை கையாளவும் ஏற்ற நவீன வசதிகளுடன், மதுரை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம் இன்று திறக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த முனையம் 17 ஆயிரத்து 500 சதுர மீட்டரில், 128 கோடி ரூபாய் செலவில், உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஏரோ பிரிட்ஜ் இணைப்புகள் ("ஏரோ பிரிட்ஜ் பிங்கர்ஸ்') கட்டப்பட்டு உள்ளன. இதன்மூலம் விமான நிலைய கட்டடத்தில் இருந்து, நேரடியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஏற்கனவே, மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்த முடியும். புதிய முனையம் திறக்கப்பட்டதும் ஏழு விமானங்களை நிறுத்தலாம்.
பசுமை கட்டடம்: சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, மின்சாரத்தை சேமிக்கும் பசுமை கட்டடமாக ("கிரீன் பில்டிங்') புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறு "எஸ்கலேட்டர்' (நகரும் படிக்கட்டு), ஆறு "லிப்டு'கள் உள்ளன. வெளிநாட்டு பயணங்களுக்கான இமிகிரேஷன், கஸ்டம்ஸ் பணிகளுக்கு தனியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை சோதனை செய்வதற்கான (செக் இன் ஏரியா) ஒரே இடத்தில் அமைக்கப்படுகிறது. புறப்படும் 250 பயணிகள், வந்துசேரும் 250 பயணிகள் என 500 பேரை ஒரே நேரத்தில் கையாளுவதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர் அழகிரி முன்னிலையில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைக்கிறார். அக்டோபரில் செயல்படும்: புதிய முனையக் கட்டடத்தை விமான நிலையங்கள் ஆணையக் குழும திட்ட உறுப்பினர் ராஹேஜா நேற்று பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய முனையம் அக்டோபர் இறுதியில் செயல்பட துவங்கும். இக்கட்டடத்தில் மழை நீர் சேகரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீணாகும் கழிவு நீரை தனியாக பிரித்து பிளான்ட்டுகள் மூலம் சுத்திகரிப்பு செய்யப்படும். தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவர், என்றார். தென்மண்டல நிர்வாக இயக்குனர் தேவராஜ், பொது மேலாளர் (திட்டம்) சுதாகர், மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையா பாண்டியன் உடனிருந்தனர்.
மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் தரை இறங்கிய விமானம் : மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் விமானம் தரை இறங்கிய மதுரையில், தற்போது விமான நிலையமே மின் விளக்குகளால் ஒளிர்கிறது. மதுரை விமான நிலையத்தில் 1960களில், சில நாட்கள் விமானம் இரவில் வந்து செல்லும். ரன்வே முழுவதும் மின்விளக்கு வசதிகள் அப்போது இல்லை. அந்த காலத்தில் பயன்படுத்தப்படும் "லாந்தர்' விளக்குகள் போன்றவையே, ரன்வே பகுதியிலும் பயன்படுத்தப்பட்டன. விமான நிலைய ஊழியர், 10லிட்டர் மண்ணெண்ணெய் கொள்ளளவு உள்ள விளக்குகளை தரையை சுத்தம் செய்து ரன்வே அருகே வைப்பார். மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டு, தடிமனான திரி போட்டு விளக்குகளை பற்ற வைத்த பின், விமானம் தரை இறங்கும். தரை இறங்கும்போதே பாதி விளக்குகள் அணைந்துவிடும், விமானம் செல்வதற்கு முன் மீண்டும் விளக்குகள் பற்ற வைக்கப்படும்.
ஓய்வு பெற்ற விமான நிலைய ஊழியர் பங்காரு கூறியதாவது: அப்போது பாதுகாப்பு சோதனை என்பது கிடையாது. மதுரை குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து எஸ்.ஐ., மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபடுவர். அப்போதிருந்த குறைந்த வசதிகளை வைத்து விமான போக்குவரத்தை நடத்தியது பெரிய விஷயம். இவ்வாறு பங்காரு கூறினார். 1965லிருந்து 1970 வரை சித்திரைத் திருவிழாவை பார்க்க பக்தர்களுக்காக, குட்டி விமானங்கள் மதுரையில் இயக்கப்பட்டன. இதற்கான 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மதுரை மண்ணை தொட்ட விமானங்கள் : ராணுவ விமானதளமாக இருந்த மதுரை விமானநிலையம், 1960க்கு பின் சிவில் விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
*மதுரைக்கு 1965ல் "டகோடா(டி.சி.,3)' ரக விமானம் சென்னையிலிருந்து வந்து சென்றது. அதில் 26 பேர் செல்லலாம். பின் 40 பேர் பயணம் செய்யும் "போக்கர் பிரண்ட்ஷிப்' ரக விமானம் மதுரை வந்தது.
*1970 களில் மதுரை வந்த "ஆவ்ரோ' ரக விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர். சென்னை-மதுரை- திருவனந்தபுரம் மற்றும் சென்னை-மதுரை-பெங்களூரு என இரு விமான சர்வீஸ் நடந்தது.
*1980க்கு பின் "போயிங் 737' ரக விமானம் மதுரை வந்தது. அதில் 147 பேர் பயணம் செய்ய வசதி இருந்தும், ரன்வே பலவீனமாக இருந்ததால், குறைந்த அளவு பயணிகளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், என்.இ.பி.சி., தனியார் நிறுவனம் "ஏ.டி.ஆர்.,' ரக விமானத்தை சென்னை- மதுரை போக்குவரத்திற்கு பயன்படுத்தியது.
*ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் "போயிங்' ரக விமானத்தில் மும்பை-மதுரை போக்குவரத்தை துவக்கியது. சில ஆண்டுகளுக்கு பின் இரு நிறுவனமும் போக்குவரத்தை ரத்து செய்தது.
*தற்போது ஜெட் ஏர்வேஸ், ஏர் டெக்கான் நிறுவனத்துடன் இணைந்த கிங் பிஷர் நிறுவனங்கள் "ஏ.டி.ஆர்.,' ரக விமானங்களை பயன்படுத்துகிறது. பாரமவுன்ட் ஏர்வேஸ் "எம்பரர்' ரக விமானத்தை பயன்படுத்துகிறது.
*இந்தியன் விமான நிறுவனம் "ஏர்பஸ் 320' ரக விமானத்தை பயன்படுத்துகிறது. இதில் குறைந்தது 170 பயணிகள் செல்லலாம். தற்போது மதுரை வரும் சிறிய ரக விமானங்களுக்கு இடையே "ஏர்பஸ் 320 ' ரக விமானம் ஜாம்பவானாக உள்ளது.
விமான நிலையம்...இதுவரை : இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ விமானதளமாக மதுரை விமானநிலையம் இருந்தது. பின், மதுரையில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளின் போக்குவரத்திற்கும், அவர்களுக்கு பத்திரிகைகள் எடுத்துவரவும் விமான போக்குவரத்து துவங்கியது. சுதந்திரத்திற்கு பின் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அவ்வப்போது மதுரை வந்து செல்லும். பின்னர் சில ஆண்டுகளில், தினமும் மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரை, மீண்டும் அதே மார்க்கமாக மும்பைக்கு விமானம் சென்றது. அப்போது எல்லாம் மதியம் வரவேண்டிய விமானம் நள்ளிரவு 12 மணிக்கு கூட வரும். இடையில் தனியார் நிறுவனங்கள் சிறியரக விமானங்களை இயக்கி, தொடர முடியாமல் விட்டு விட்டன.
தனியாருக்கு அனுமதி அளித்ததும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏ.டி.ஆர்., ரக விமானத்துடன் மதுரையில் போக்குவரத்தை துவக்கியது. சென்னை-மதுரை மீண்டும் சென்னை என சர்வீஸ் இருந்தது. பின், ஏர் டெக்கான் நிறுவனம் சென்னை-மதுரை-சென்னை, சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி என ஏ.டி.ஆர்., ரக விமான போக்குவரத்தை துவக்கின. சில ஆண்டுகளுக்கு முன் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் சர்வீசை துவக்கியது. விமான நிறுவனங்களுக்கு இடையே எழுந்த போட்டியால், சில ஆண்டுகளுக்கு முன் தினமும் 11 விமானங்கள் மதுரை வந்தன. தற்போது ஒன்பதாக குறைந்து விட்டது.
மதுரை எம்.பி.,யாக ராம்பாபு இருந்தபோது, சர்வதேச விமானநிலையமாக மாற்றுவேன் என்றார். அதற்கடுத்து சுப்பிரமணியசாமி எம்.பி.,யானபோது, பழைய கட்டடத்தை புதுப்பிக்க 35கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்தன. இது தான் மதுரையில் பன்னாட்டு விமானநிலையம் வர, நடந்த முதல்பணி எனலாம். பின்னர் மோகன் எம்.பி., பார்லி.,யில் இது தொடர்பாக பேசினார். மத்திய அமைச்சராக மு.க.அழகிரி பொறுப்பேற்றதும், புதிய முனைய பணிகள் தீவிரமானது. விமானநிலைய ரன்வேயின் நீளம் ஆறாயிரம் அடி, 45 மீட்டர் அகலம் என 2005 வரை இருந்தது. சிறிய ரக விமான போக்குவரத்திற்கு மட்டும் இது வசதியாக இருந்தது. பின்னர் ரன்வேயை விரிவாக்கும் பணி 2007 ல் முடிந்தது. அதன் பின், விமானங்களை நிறுத்தும் "ஏப்ரன்' பகுதிக்கான வேலைகள் துவங்கி, 2008 மார்ச்சில் முடிந்தன. ஐந்து விமானங்களை நிறுத்தும் வசதி கிடைத்தது. கருவிகள் மூலம் விமானங்களை தரை இறக்கும் ஐ.எல்.எஸ்., (இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம்) வசதி ஐüலை 2008ல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் மூலம் பனி, மழை காலத்தில் விமானங்கள் ரன்வேயில் இறங்கி, ஏறுவது எளிதாக இருக்கும்.
பன்னாட்டு விமானநிலையம்:விமானநிலையம் அருகே ஒருங்கிணைந்த பன்னாட்டு விமானநிலைய கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா 2008 ஏப்.,26ல் நடந்தது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல்படேல் தலைமை வகித்தார். முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். பணிகள் துரிதமாக நடந்து இன்று திறப்புவிழா காண்கிறது.
மதுரை விமான நிலையத்திற்கு மேலும் என்ன தேவை : நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, இன்று (செப்.,12) மதுரையில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 17,500 சதுர மீட்டர் பரப்பளவில், பரந்து விரிந்துள்ளது புதிய முனையம். 9,500 அடி நீளத்திற்கு விமான ஓடுபாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலக சர்வதேச விமான போக்குவரத்து வரைபடத்தில், மதுரையின் பெயரும் இடம் பெற இருக்கும் நிலையில், இந்த முனையத்திற்கு இன்னும் என்னென்ன தேவை என சிலரிடம் கேட்டபோது...தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன்: மதுரைக்கு அருகே கார் தொழிற்சாலை அமைந்தால், அதை வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதற்கு ஜம்போ ஜெட் விமானம் மதுரையில் இறங்க வேண்டும். அதற்கு விமானநிலையத்தின் ஓடுதளத்தை 12,500 அடியாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். இத்திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது. புதிய முனையத்தில் 17,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட டெர்மினல் பில்டிங், புதிய கட்டடங்கள் இயற்கையான வெளிச்சம் பரவும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள் திறந்தவெளியில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். செக்கிங் ஹால், இமிகிரேஷன் ஹால், 350 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கார் பார்க்கிங் வசதி, 6 எஸ்கலேட்டர், ஆறு லிப்ட் வசதி, எக்ஸ்ரே மெஷின்கள்,
பார்வையாளர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்வையிடும் வசதி வரவேற்கத்தக்கது.
புதிய விமானங்களின் தேவை அதிகரித்து வருவது போல், பயிற்சி பெற்ற விமானிகள், பொறியாளர் கள், நிர்வாகிகள் தேவையும் அதிகரிக்கிறது. இவர்களுக்கான அனைத்து பயிற்சியும் அளிக்க, மதுரையில் விமானவியல் பல்கலை நிறுவ வேண்டும். மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவையை துவக்க, மதுரை விமான நிலையத்தை "சுங்கவரிச் சோதனை விமான நிலையமாக' மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புதிய முனையம் திறக்கப்பட்ட பின், தற்போதுள்ள கட்டடம் சரக்கு போக்குவரத்து வளாகமாக மாற்ற வேண்டும். மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் போன்ற நாடுகளுக்கு நேரடி விமான சேவை ஏற்படுத்த வேண்டும். விமான நிலையத்தில்இருந்து நகருக்கு அரசு பஸ் கழகம் சார்பில் குளிரூட்டப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும். ஸ்ரீராம் (முன்னாள் தலைவர், டிராவல் கிளப்): விமான நிலையத்தில் சுங்கவரி மற்றும் இமிகிரேஷன் மையங்கள் அமைந்தால் தான், சர்வதேச விமானங்கள் வர முடியும். இம்மையங்களை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருங்குடியில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் : மதுரை விமான நிலையத்திலிருந்து 2008ல் 3,58,806 பேர் பயணித்துள்ளனர். 8653 முறை விமானங்கள் வந்து சென்றுள்ளன. 2011ல் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு பயணிகள் உட்பட 6.15 லட்சம் பேர் பயணிப்பர் என்றும், 2016ல் 2.36 லட்சம் வெளிநாட்டு பயணிகள் உட்பட 9.17 லட்சம் பேர் பயணிப்பர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
செய்தி : தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83074
0 comments:
Post a Comment