Saturday, April 24, 2010

எங்கே அழகிரி?

நேற்று பாராளுமன்றம் இரு விவகாரங்களில் அமளி துமளிப் பட்டது. ஒன்று வழக்கம்போல் ஐபிஎல் விவகாரம். நாட்டு மக்கள் பல பேருக்கும் ஏன் பாராளுமன்றத்தில் பல பேருக்கும் என்ன பிரச்சனை என்று முழுவதும் தெரியுமா என்பது சந்தேகம் தான். அடுத்த விவகாரம் அழகிரி எங்கே என்பது.


அழகிரியால் சுமார் 15 நிமிஷம் ஒரு சலசலப்பு. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டு அமளி ஏற்பட்டிருக்கிறது. காரணம், வேறு எதுவுமில்லை!! அழகிரி வழக்கம்போல் அவையில் இல்லை. வழக்கமாக அழகிரி கேள்வி நேரங்களிலும், கேபினட் ஆலோசனைக் கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கிட்ட்த்தட்ட அவர் அமைச்சரான போதிலிருந்தே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அவருக்கு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் போதிய பரிச்சயம் இல்லை.

இதற்காக கேள்வி நேரத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதி கோரி அவர் சபாநாயகரிடம் ஒரு மனு அளித்திருந்தார். ஆனால் ஒரு கேபினட் அமைச்சர் ஆங்கிலத்திலேயோ அல்லது ஹிந்தியிலேயோதான் பதிலளிக்க முடியும், அல்லது விவாதிக்க முடியும் என்பது பாராளுமன்ற விதிமுறை. இவ்விதியை அழகிரியை முன்னிட்டுத் தளர்த்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பருப்புதான் என்னவோ வேகவில்லை.

இந்நிலையில் நேற்று மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அழகிரி எங்கே என்று பிரச்சனையைக் கிளப்பினர். நேற்றைய முன்தினம் கூட கேள்வி நேரத்தில் இப்பிரச்சனை கிளப்ப்ப்பட்ட போது, ப்ரணாப் முகர்ஜி எழுந்து விவகாரத்தை சமாளிக்க முயன்றிருக்கிறார். "அழகிரி வெளிநாட்டுக்கு போயிருக்கார் அதனால் அவையில் இல்லை" இது தான் அவர் சொன்ன சூப்பர் பதில்!.



“சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், அழகிரியை பாராளுமன்றத்தில் பார்த்தே ஒரு வருடம் ஆகிறது என்றிருக்கிறார்.”



இதற்கு பதிலளித்த லோக் சபை சபாநாயகர் மீரா குமார், அழகிரி எங்கு சென்றிருக்கிறார் என்று தெரியவில்லை, தவிர அவரிடமிருந்து எவ்விதமான தொடர்பும் இதுவரை இல்லை. மேலும் அவர் அயல்நாடு செல்வதற்கு முன்பு கூட அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என்னிடம் சொல்லிவிட்டு தான் செல்கிறார்கள் என்று சொன்னார். [ சரியாக சொல்ல வேண்டும் என்றால் Prime Minister Manmohan Singh and other ministers are very particular about it (courtesy and decorum). Whenever they go, they always inform my office.” ]

மேலும் கூறுகையில், அழகிரி எப்போது வந்தாலும் அவரிடம் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைக் கேட்டுத் தெளிவுபடுத்துவதாகவும் மீரா குமார் தெரிவித்திருக்கிறார்.


ராஜ்ய சபையில் இப்பிரச்சனை கிளப்ப்ப்பட்ட போது பதிலளித்த, சபாநாயகர் அன்ஸாரி அவர்கள், இது சற்றே சிக்கலான விவகாரம், இது தனியாக விவாதிக்கப்பட வேண்டும், இதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க முடியாது என்று பதிலளித்திருக்கிறார்.



ஆக மக்களால் ஜனநாயக்க் கடமைகளை நிறைவேற்ற ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதுவும் ஒரு அமைச்சர், அவைக்கே வருவதில்லை. இது ஜனநாயகத்தின் சாபக்கேடா அல்லது மக்களின் துரதிருஷ்டமா?



நேற்றைய தினம் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்ஸிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன், அழகிரி அவைக்கு வராமல் மக்களை ஏமாற்றுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களாகிய நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. ஓட்டிற்குத்தான் கணிசமாக்க் கிடைக்கிறதே!! அவர் அவைக்குச் சென்றால் என்ன அல்லது எங்கு சென்றால்தான் என்ன?


மஞ்சள் குறிப்பு: அழகிரி கோடை வெயிலிலிருந்து தப்பித்து குளுமை பெற மாலத்தீவிற்குச் சென்றுள்ளார் அழகிரி. இவரது தந்தையார் ஆட்சியில் கோடையில் மின்வெட்டினால் ஏற்படும் வெக்கையிலிருந்து தப்பிக்க ஸ்ரீமான் பொதுஜன்ங்கள் எந்த தீவிற்குச் செல்வது 

-- உபயம்- இட்லி வடை


0 comments:

Post a Comment